top of page

​கண்ணான கண்ணே - பிறந்த கதை!

பிரனிதி மற்றும் குடும்பத்தினருடனான எனது முதல் சந்திப்பு மறக்க முடியாதது.  பிரனிதிக்குச் சிறந்த குரல் வளம் இருப்பதாக உலகம் அறிந்திருந்தபோது ​​இளம் வயதில் அவர் YouTube இல் பாடல்களைப் பாடுவதைப் பார்க்கையில் அவரது உணர்வாளும் திறமையையையும் என்னால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

​​பலவிதமான உணர்ச்சிகளை சிரமமின்றித் தனக்குள்ளிருந்து கொண்டு வரும் பிரனிதியின் அசாதாரணத் திறனை ஒவ்வொரு வீடியோவைப் பார்க்கும் போதும் உணர்ந்தேன்.  அந்தத் தருணங்களில், நான் ஒரு பாடகியை மட்டுமல்ல! பார்க்கும், தன் குரல் கேட்கும் யாரையும், அன்பு கலந்த உற்சாகத்தால் கட்டிப் போடும் திறன் கொண்ட ஒரு சகலகலா வல்லியைப் பார்த்தேன்.

Praniti, family and KK.png

வீட்டில் காலடி எடுத்து வைத்ததும், பிரனிதியின் அம்மாவும் அப்பாவும் என்னை அன்புடன் வரவேற்றனர். 

என்னைப் பார்த்ததும் கண்களில் பிரகாசத்துடன், "மாமா! நான் உங்களுக்காக இந்தப் பாடலை பியானோவில் வாசிக்கப் போகிறேன்" என்றார், பிரனிதி.

ஒரு மகளுக்குத் தந்தையாகும்போது, ​​ஒரு மனிதனிடம் உள்ள அடக்க முடியாத குணங்கள் - கண்ணியமாக, எல்லையற்ற அன்பாக மாறுகிறது என்று நான் நம்புகிறேன். இது ஒரு ஆண் ஒரு பெண்ணைத் தனது சொந்த மகளாகக் கருதும் போதும் கூடத் தெளிவாகிறது. பெண்ணினத்தின் அன்பும் கருணையும் அவனை இந்தப் பரிணாம வளர்ச்சிக்குத் தூண்டுகிறது என்றும் நம்புகிறேன். என் மகள் மூலம் இப்பாக்கியம் பெற்ற நான் அதே எல்லையற்ற அன்பு செல்லக் குட்டி பிரனிதியைப் பார்த்தவுடன் நெஞ்சில்  பொங்குவதை உணர்ந்தேன். 

பியானோவில் அமர்ந்த பிரனிதியின் விரல்கள் நடனமிட, அவர் அப்பா, "இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவள் பியானோவைத் தொடுகிறாள்,"  என்று சொல்ல, அந்தத் தருணத்தில், நான் ஒரு திறமையான கலைஞரின் ரசிகன் என்ற நிலை தாண்டி, மனதின் எல்லைகளைத் தாண்டிய எங்கள் இரு இதயங்களின் இணைப்பைக் கண்டேன் - பகிர்ந்து கொள்ளப்பட்ட மகிழ்ச்சி மற்றும் பாசத்தின் மொழியில் மெளனமாக உருவான இணைப்பே அது.

அந்த காலகட்டத்தில், ஒரு திரைப்படத்தை உருவாக்கும் யோசனையில் நான் இருந்தேன். எங்கள் பைலட் திரைப்படத்துடன் திரைப்படத் தயாரிப்பு ஒரு மகன்-அப்பா அன்பினை மையமாகக் கொண்டது.  திரைப்படங்களில் சிறிய மற்றும் மறக்கமுடியாத பாத்திரங்களில் நடித்த பிரனிதியின் நடிப்பு குறித்த முன் அனுபவம் அறியாத என் மனதில் உருவான கேள்வி - 

சினிமா கேன்வாஸில் உணர்ச்சிகளின் சங்கமத்தை நெய்யக்கூடிய ஒரு வித்தியாசமான மகள்-தந்தை

கதையை நாம் முழுப் படம் ஆக்கினால் என்ன?

PXL_20221201_061901601_Original (1).jpg

ஆரம்பத்தில் ஒரு யோசனையாகத் தொடங்கியது விரைவில் ஒரு முழு நீளத் திரைப் படமாக உருவானது. ஒரு மகளுக்கும் அவளுடைய தந்தைக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட மென்மையான அன்பு, காதல், குடும்ப உறவுகள் மற்றும் மனித உறவுகளில் மன வேறுபாடுகள், அதனால் வரும் சோதனைகள், சோதனைகளை வெல்லப் போட்டி போடும் அப்பா, மகள் என,  காட்சிக்கு காட்சி வேகமாக நகரும் திரைப் படமாக மலர்ந்துள்ளது, "கண்ணான கண்ணே." 

முதலில் - பிரனிதி நான் எழுதிய பாடலைத் தன் குரலால் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற மறக்க முடியாத மகிழ்ச்சியாக இருந்த, ஆங்கிலத்தில் நான் எழுதிய பாடலின் பதிவுடன் எங்கள் படைப்புப் பயணம் தொடங்கியது. அப்போது, ​​எங்களின் மூன்றாவது திரைப்படம் பிரனிதி பாடிய அப்பாடல் இடம்பெறும் அளவுக்கு அதிர்ஷ்டம் பெறும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

முதலில் நான், பிறகு என் மகள் மற்றும் மனைவியும் பிரனிதி மற்றும் குடும்பத்தினரை சந்தித்தோம். சில நாட்கள் என்றாலும், பிரனிதி எங்கள் வீட்டில் தங்கியிருந்த நாட்கள் மற்றும் நாங்கள் அனைவரும் சேர்ந்து அவருக்கு வீட்டுப் பாடங்களில் உதவுவது, நாங்கள் ஒரு ஷாப்பிங் மால் செல்வது, நான் பிரனிதியைப் பள்ளி விழாவிற்கு அழைத்துச் சென்றது - இவை மிகவும் மறக்கமுடியாதவை.

மேலும், 4 கோடி தடவை பார்க்கப்பட்ட பிரனிதியின் "கண்ணான கண்ணே" விஸ்வாசம் படப் பாடல், எங்கள் படத்தின் சாராம்சத்துடன் எதிரொலித்தது மட்டுமல்லாமல்,   இதயப்பூர்வமான தொடர்பைக் கொண்டிருந்தது.

சம்பத் கிருஷ்ணா, இதற்கு முன் இயக்குனர் பாலாவிடம் "பிதாமகன்" படத்தில் உதவி இயக்குனாராகப் பணி புரிந்திருக்கிறார். அவரது எளிய இனிய கதையை நானும் அவரும் சேர்ந்த்து திரைக் கதையாக எழுதினோம். பின்னர் பிரசாந்த் அதை மென் மேலும் மெருகேற்றினார்.

நடிப்புத் துறையில், பிரனிதித் தங்கம் எனது குருக்களில் ஒருவர். "கண்ணான கண்ணே" படத்தில், நடிப்புத் திறமை மட்டும் அல்லாமல் இரண்டு பாடல்களுக்கு தனது அழகான குரலையும் வழங்கியுள்ளார். எங்கள் படத்தில் நான்கு பாடல்கள் உள்ளன! 

1. காலை நேர சூரியனே! -  சீதாவின் பிறப்பு

2. துளி கூடும் போதிலே! - சீதாவின் அன்பு

3. ஊமை எந்தன் தோட்டத்தில்! - சீதாவின் சோதனை

4. பித்தா பிறை சூடி!  - சீதாவின் பக்தி

படப்பிடிப்புக் கால  நாட்கள் தூய்மையான அன்பால் நிரப்பப்பட்டன. இந்த நேரத்தில், நான் சிலம்பத்தைக் கற்றுக்கொண்டு பிரநிதியுடன் எனது அமெச்சூர் திறன்களைப் பகிர்ந்துகொண்டேன்.பிரனிதி எளிதில் கற்றுக் கொண்டார்.  எந்தக் காட்சியாயிருந்தாலும் உணர்வுகளை, உடனடியாக, ஆனால் மங்கா ஆழத்தில் கொண்டு வந்தார் பிரனிதி. நாங்கள் அனைவரும் ஒரே விடுதியில் தங்கியிருந்தோம். அதனால் பல படப்பிடிப்பு இடங்களுக்கு அவரை அழைத்துச் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. எனது மகள் படப்பிடிப்பு நாட்களில் இல்லாததானது,  ஏக்கத்தை ஏற்படுத்தியது. அதை இன்னொரு அன்பு மகள் பிரனிதி போக்கினார்

பிரனிதி எனக்கு இன்னொரு மகளாக வாழ்க்கையில் இருப்பது VS நாங்கள் சினிமா - பாடல் மூலம் மட்டும் பழகும் சக கலைஞர்களாக இருப்பது - இவை இரண்டில் ஒன்று மட்டுமே நான் தேர்ந்தெடுக்க முடியும் என்றால் நான் இந்தத் தெய்வக் குழந்தை எனக்கு மகளாக இருப்பதையே கண்ணிமைக்கும் நேரத்தில் தேர்ந்தெடுப்பேன். 

நல்ல வேளை - அந்தச் சோதனை இன்றில்லை. நாங்கள் இருவரும், மென் மேலும் பல திரைப்படங்கள், பாடல்கள் உருவாக்கும் படி அமைய நீங்களும் அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டால், அதுவே எனக்கு அளப்பரிய பரிசாகும். 

நன்றி,

​காமராஜ் கல்யாணசுந்தரம். 

கண்ணான கண்ணே டிரெய்லர்

துளி கூடும் போதிலே - சீதாவின் அன்பு

காலை நேரச் சூரியனே - சீதாவின் பிறப்பு

ஊமை எந்தன் தோட்டத்தில் - சீதாவின் சோதனை

பித்தா பிறைசூடி - சீதாவின் பக்தி

நான் யார்? - காமராஜ்

bottom of page